search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குங்கும அர்ச்சனை"

    யார் ஒருவர் மனதார கொல்லூர் மூகாம்பிகை தலத்தில் குங்கும அர்ச்சனை செய்கிறாரோ, அவர்களது குடும்பத்து குறைகள் எல்லாம் நீங்கி விடும் என்பது ஐதீகமாகும்.
    கொல்லூர் மூகாம்பிகை அருளைப் பெற 64 விதமான வழிபாடுகள், சேவைகள் இருக்கின்றன. அவற்றில் சில வழிபாடுகளை பக்தர்கள் மிகவும் விரும்பி ஆத்மார்த்த உணர்வுடன் செய்வதுண்டு.

    அந்த வகையில் மூன்று வழிபாடுகள் பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புடன் திகழ்கிறது. அவை 1. சண்டி ஹோமம். 2. தீபம் ஏற்றுதல், 3. குங்கும அர்ச்சனை.

    இந்த மூன்றில் சண்டி ஹோமத்துக்கு ரூ. 8 ஆயிரமும், தீப கம்பத்தில் விளக்கு ஏற்ற ரூ.3 ஆயிரமும் செலவிட வேண்டும். ஆனால் முப்பதே ரூபாயில் குங்கும அர்ச்சனையை நடத்தி விடலாம்.

    சிறிய தொகை வசூலிக்கப்படுவதால் குங்கும அர்ச்சனையை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். உங்கள் வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றி தரும் அற்புத ஆற்றல் இந்த குங்கும அர்ச்சனைக்கு உண்டு. யார் ஒருவர் மனதார கொல்லூர் மூகாம்பிகை தலத்தில் குங்கும அர்ச்சனை செய்கிறாரோ, அவர்களது குடும்பத்து குறைகள் எல்லாம் நீங்கி விடும் என்பது ஐதீகமாகும்.

    மகத்துவம் நிறைந்த இந்த குங்கும அர்ச்சனையை செய்வது எப்படி தெரியுமா?

    கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்துக்குள் நுழைந்ததும் வடக்குப் பகுதியில் உள்ள நுழைவுச் சீட்டு கவுண்டர்களுக்கு சென்றால் பல்வேறு விதமான சேவைகளுக்கு அனுமதி சீட்டு தருவார்கள். அங்கு கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த சீட்டை பத்திரமாக வைத்துக் கொண்டு ஆலயத்துக்குள் செல்ல வேண்டும்.

    கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னை மூகாம் பிகையை கண் குளிர பார்த்து விட்டு இடது புறமாக உள்பிரகாரத்துக்கு வருவீர்கள். அந்த உள்பிரகாரத்தில் பக்தர்கள் அமரும் வகையில் மண்டபம் உள்ளது.



    அந்த மண்டபத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஆலய புரோகிதர் ஒருவர் குங்கும அர்ச்சனை செய்ய தயாராக இருப்பார். அவரிடம் அனுமதி சீட்டை காட்டினால் அவர் அருகில் அமர சொல்வார்.

    அவர் அருகில் அமர்ந்து “சங்கல்பம்” செய்து கொள்ள வேண்டும். முன்னதாக அந்த புரோகிதரிடம் உங்களது கோத்திரம், குலம், குடும்ப உறுப்பினர்களின் நட்சத்திர விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

    உதாரணத்துக்கு நீங்கள் சிவ கோத்திரத்தை சேர்ந்தவர் என்றால் சிவ கோத்திரம் என்று சொல்லி, பிறகு உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயர், ஜென்ம நட்சத்திரத்தை சொல்ல வேண்டும். அதை அந்த புரோகிதர் திருப்பிச் சொல்லி அம்மனுக்கு குங்கும அர்ச்சனையை நடத்துவார். சில புரோகிதர்கள், சில குறிப்பிட்ட மந்திரங்களை நம்மையும் சொல்ல சொல்வார்கள். இது நாமே அன்னை மூகாம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்வதாக அர்த்தம்.

    குங்கும அர்ச்சனை பூஜை முடிந்ததும் புரோகிதர் நம் மீது அட்சதையைத் தூவி வாழ்த்துத் தெரிவிப்பார். அவருக்கு நாம் உரிய தட்சணை தொகை வழங்க வேண்டும்.

    பிறகு நாம் அந்த உள் பிரகாரத்தில் இருந்து வெளியில் வர வேண்டும். நீங்கள் குங்கும அர்ச்சனைக்காக எந்த இடத்தில் அனுமதி சீட்டு வாங்கினீர்களோ.... அதன் அருகிலேயே மற்றொரு கவுண்டரில் அனுமதி சீட்டை கொடுத்தால் குங்கும பிரசாதம் கொடுப்பார்கள்.

    அந்த குங்குமம் தினமும் அன்னை மூகாம்பிகையின் காலடியில் அர்ச்சனை செய்யப்படும் குங்குமமாகும். அந்த குங்குமத்தைத்தான் நமக்கு பிரசாதமாகத் தருகிறார்கள். எனவே அன்னை மூகாம்பிகையை மனதில் நினைத்தப்படி அந்த குங்குமத்தை வாங்குங்கள்.

    சில பக்தர்களுக்கு நிறைய குங்குமம் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் தோன்றும். அதற்கு எளிய வழி ஒன்று உள்ளது. கூடுதலாக 4, 5 அனுமதி சீட்டுகளை வாங்கி இருந்தால் அதிக அளவு குங்குமத்துடன் வீடு திரும்ப முடியும்.

    கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்துக்கு செல்லும் போது, நீங்கள் எந்த வழிபாடு செய்கிறீர்களோ, இல்லையோ, மறக்காமல் குங்கும அர்ச்சனை செய்து விடுங்கள். அது நிச்சயமாக உங்கள் குறைகளை விரட்டி விடும்.
    ×